இந்த வலையதளத்தில் உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது.இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல.பல பதிவர்கள் எழுதிய நல்ல பதிவுகளைத்தான் இங்குதொகுத்துள்ளேன்.

என்னுடைய மற்ற இணையதளங்கள்

Thursday, April 19, 2012

குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!



இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.


சுகாதாரம் அவசியம்
சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும்.

குக்கரின் அடிப்பகுதியில் விளக்கி கழுவ வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். நாம் அதிக அளவில் ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பாஞ்ச் வைத்து குக்கரின் அடிப்பகுதியை கழுவலாம்.


குக்கரில் அடி பிடித்து விட்டாலோ, கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு கிளீன் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப் நீர் விட்டு குக்கரில் ஊற்றவும். அதை லேசா சூடாக்கி பின்னர் கழுவினால் தீய்ந்து போன உணவுகள் ஈசியாக வந்து விடும்.

கறுப்பு வெள்ளையாகும்
குக்கரின் உட்புறம் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோல் அல்லது வினிகர் கொஞ்சம் போட்டுப் பின்பு அதில் வைக்கக் கூடிய பாத்திரங்களை அடுக்கி வைப்பதால் அதன் உட்புறம் கறுப்பாகாமல் இருக்கும். கறுப்பாக இருந்தாலும் இந்த முறையின் மூலம் கறுப்பு நீங்கி விடும்.

குக்கரின் ரெகுலேட்டர், விசில் போன்றவைகளை குழாயில் காண்பித்து கழுவுவது பழைய முறை. தற்போது தனித்தனியாக கழுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே விசில் பகுதியை தனித்தனியாக உரசி கழுவி நன்றாக உலர்ந்த துணி கொண்டு துடைத்து வைக்கலாம் நீண்ட நாட்களுக்கு வரும்.


கேஸ்கட் பராமரிப்பு
சிலர் குக்கர் மூடியைத் திறந்தபின்பு கேஸ்கெட்டை எடுக்காமல் அப்படியே வைத்து விடுவார்கள். சிலர் கேஸ்கெட்டை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறு. சூட்டோடு அப்படியே போடுவதால் ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கெட் அதிக நாள் உழைக்காது.


சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் மாட்டவேண்டும். இப்படிச் செய்தால் ரப்பர் கேஸ்கெட் அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.

நீண்ட ஆயுள் கிடைக்கும்
தற்போது காப்பர் பாட்டம், நான் ஸ்டிக் சாண்ட்விட்ச் போன்ற வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை ரொம்பவும் குறைத்து "சிம்'மில் வைத்தாலே போதும். சமையலும் சீக்கிரம் முடியும், கேஸ் மிச்சப்படும்.


நமக்கு பாதுகாப்பு

வருடத்திற்கு ஒருமுறை குக்கரை அதற்குரிய கடைகளில் கொடுத்து இன்ஸ்பெக்சன் செய்யவேண்டும். கேஸ்கட், விசில், போன்றவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை பார்க்கவேண்டும். சின்னதாக ஏதாவது பிரச்சினை என்றாலும் குக்கர் வெடித்து விடும் ஜாக்கிரதை. குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். லூசாக இருந்தால் உடனே மாற்றவேண்டும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.


குக்கர் பராமரிப்பு குக்கரின் ஆயுளை மட்டும் நீட்டிப்பதில்லை. குக்கர் வெடிக்காமல் இருந்தால் நம் ஆயுளும் நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இவைகளைப் பராமரிக்கும் விதத்தைப் புரிந்து கொண்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். சிக்கனமும் ஆகும்.

செல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு!


Solutions For Cellphone Deffects
செல்போன் தொழில் நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கின்றது ஆய்வு முடிவுகள். செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை
தவிர்க்கலாம்.
ஆம்! குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும்.
முடிந்த வரை லேண்ட்லைனை பயன்படுத்துவது நல்லது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே செல்போனை பயன்படுத்தினாலும் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது. சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதோடு தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று. மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும் கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.
முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.
பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும். இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம். பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக பாதிக்கப்படும்.
இப்படி விளையாட்டாகவும், கவன குறைவாகவும் செய்யும் சில வேலைகளை குறைத்தாலே செல்போன்கள் மூலம் ஏற்படும் பெரிய பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும். 

Thanks

Sunday, February 12, 2012

நம் நாட்டு பொருளாதாரம் சீராக, இரண்டு வருடங்களுக்காவது நம் தயாரிப்புகளையே வாங்கி, நாட்டுக்கு நம்மாலான சிறு தொண்டைச் செய்வோமா?

அமெரிக்கா பயங்கர பொருளாதார நெருக்கடியில் இருப்பது உனக்குத் தெரியும்... அமெரிக்கா என்ன... ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்...
குளோபலைசேஷன் என்ற போர்வையில், பழைய காலனி ஆதிக்கத்தை திணிக்கின்றனர்... வெளிநாடுகளை அடிமைப்படுத்தி, காலனியாக முன்பு வைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு என்பதை, இவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
 
இனிமேல் அதே தவறை திரும்பச் செய்ய மாட்டார்கள்... அதற்கு மாற்று தான் குளோபலைசேஷன்... இன்று, இந்தியாவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டு வருகின்றன... இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பெயர் பெற்ற நகரம் அலிகார்... தோல் செருப்புகளுக்கு ஆக்ரா...
 
வெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இந்த சிறு தொழில்கள் அழிந்து விட்டன... நீங்கள் - இந்தியர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், பொருளாதார நிலைமை கவலைக்கிடமாகி விடும்.
 
ஒவ்வொரு வருடமும், நம் இழப்பு அதிகமாகி வருகிறது... 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், உங்களது பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள், 
ஆண்டுதோறும் சுருட்டிக் கொண்டு போகின்றன... இது, எதிர்காலத்தில் கூடுமே தவிர குறையாது... "அன்லஸ், அதர்வைஸ்' நீங்கள் விழித்துக் கொண்டாலன்றி...உங்கள் ஊரிலேயே தயாராகும் பொருட்களுக்கு, அவர்களது பிராண்டு பெயர் சூட்டி, கொள்ளையடிக்கின்றனர்... ஒரு பாட்டில் குளிர்பானம் தயாரிக்க, அதிகபட்சம், 70 பைசா செலவாகும்... இதையே உங்களிடம் ஒன்பது முதல், பத்து ரூபாய் விலையில் விற்று விடுகின்றனர். லாபத்தில் பெரும் பகுதியை, தம் தலைமை நிறுவனம் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் செயல் இது. 
கொக்கோ கோலா, பெப்சி, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் குடித்தால் தான், உங்கள் தாகம் தீருமா? அதற்கு பதில் எலுமிச்சை ஜூஸ், அவ்வப்போது பிழிந்து தரப்படும் ப்ரஷ் ஜூஸ், லஸ்சி, மோர், இளநீர், ஜல்ஜீரா, பால் சாப்பிடுங்களேன்...
 
மல்டி நேஷன் நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல நான்... இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்... இல்லாவிட்டால், நம் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே விழுந்து, இப்போது, 10 ரூபாய்க்கு வாங்கும், "கோக்'கை, 15 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வரும்...
 
இன்று சபதம் எடுங்கள்... அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியப் பொருட்கள் மட்டுமே வாங்குவோம் என்று... முடிந்த வரையில் உங்கள் நண்பர், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்களையும், இந்தியப் பொருட்களை வாங்க வையுங்கள்... ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த உணர்வு வந்தால் தான், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும் எனக் கூறி முடித்தார்.
 
பின்னர், ஓட்டல் அறையில், என்னை கொண்டு விட்டார். நேரம் இரவு, 9:00 மணி. அப்போது தான், சூரியன் மறையத் துவங்கி இருந்தான்!
ஊர் திரும்பியதும், விளம்பர ஏஜென்சியில் பணியாற்றும் நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, வெளிநாட்டு பொருட்கள் எவை, எவை... அவற்றுக்கு ஈடான இந்திய தயாரிப்புகள் எவை என, ஒரு லிஸ்ட் வாங்கினேன்.
 
இதோ அது:
 
வெளிநாட்டு சோப்பு, பாத் ஜெல் போன்றவை: கேமி, பாமொலிவ், லக்ஸ், லைப்பாய், லிசான்சி, ஹமாம், ரெக்சோனா, லிரில், பியர்ஸ், டோவ்...
இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள்: நீம், மார்கோ, சிந்தால் உட்பட கோத்ரெஜ் கம்பெனிகளின் சோப்புகள், சந்தூர், விப்ரோ சிகக்காய், மைசூர் சாண்டல், எவிட்டா, நிர்மா பாத், சந்திரிகா, மெடிமிக்ஸ், கங்கா...
 
வெளிநாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்: சிபாகா, பெப்சோடன்ட், போர்ஹான்ஸ், குளோசப், கோல்கேட், மென்டாடென்ட்... 
நம் தயாரிப்புகள்: வீகோ வஜ்ர தந்தி மற்றும் டாபரின் பற்பசைகள், நீம், பபூல், பிராமிஸ், புரூடென்ட்...
 பல் துலக்கும் பிரஷ்கள், வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகள்: போர்ஹான்ஸ், பெப்சோடன்ட், கோல்கேட், குளோசப்... 
நம்முடையவை: புரூடென்ட், அஜந்தா, பிராமிஸ்...
 
ஷேவிங் க்ரீம் மற்றும் பிளேடு வெளிநாடு: பாமொலிவ், ஓல்டு ஸ்பைஸ், கில்லட், செவன் - ஒ - கிளாக், 365.
நம்முடையவை: கோத்ரெஜ், இமானி, சூப்பர் மேக்ஸ், டோபாஸ், லாசர், அசோகா...
 
வெளிநாட்டு முக பவுடர்: பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், ஷவர் டு ஷவர்... 
நமது: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிளஸ்.
 
வெளிநாட்டு ஷாம்பு: ஹென்கோ, ஆல்கிளியர், நைசில், சன்சில்க்... 
நம்மவை: லாக்மே, நிர்மா, வெல்வெட்...
 
— நம் நாட்டு பொருளாதாரம் சீராக, இரண்டு வருடங்களுக்காவது நம் தயாரிப்புகளையே வாங்கி, நாட்டுக்கு நம்மாலான சிறு தொண்டைச் செய்வோமா? 

Thanks

http://www.livingextra.com
Dinamalar

Sunday, February 5, 2012

கள்ள நல்ல நோட்டா - நல்ல நோட்டா என்பதை தெரிந்துகொள்வது எப்படி?


சமீபத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கைது செய்திருக்கிறது போலீஸ். அப்படியென்றால் நம் கையில் வைத்திருக்கும் எந்த நோட்டும் கள்ளநோட்டாக இருக்கலாம். எப்படி தெரிந்துகொள்வது? நாம் பயன்படுத்தும் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சென்னையிலுள்ள ரிசர்வ் பேங்க்
இந்தியாவின் (Reserve Bank of India) தலைமை அலுவலக கருவூல பகுதி அலுவலர்களிடம் கேட்டபோது,  “நல்லநோட்டு...தனிச்சிறப்பு வாய்ந்த காகிதமும் நன்கு கூழாக்கப்பட்ட பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நோட்டுகளை எண்ணும்போது  'பட பட'வென சத்தம் உண்டாகும். ஆனால், கள்ளநோட்டில் தரம் குறைந்த காகிதம் பயன்படுத்தப்படுவதால் தடிமனையும் தரத்தையும்  வைத்து கண்டுபிடிக்கலாம். இரண்டாவது... புற ஊதா விளக்கு ஒளியில் (அல்ட்ரா வைலட் லைட் எனப்படும் விளக்குகள் தனியாகவே இருக்கின்றன!) நன்றாக ஜொலிக்கும் மையினால் (fluorescent Ink) நல்லநோட்டு அச்சடிக்கப்படுகிறது. பணத்தில் உள்ள நம்பர்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே சீராக இருக்கும். மேலும், சிவப்பு நிறத்தில் பெரிதாக பளிச்சென்று தடிமனாக இருக்கும். 1000 ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல் பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் சிவப்புநிறத்திலும் அச்சடிக்கப்படுகிறது.  


ஆனால், கள்ளநோட்டில் பெரும்பாலும், வரிசை எண்கள் ஒரே சீராக இல்லாமல்...எண்களில் சைஸ் சிறியதாகவும்...இடைவெளி விட்டும் இருக்கலாம். மேலும், கள்ளநோட்டுகள் புற ஊதா விளக்கொளியில் (அல்ட்ரா வைலட் லேம்ப்) ஜொலிக்காது. மூன்றாவது...500....1000 ரூபாய் நோட்டுகளில் மத்தியில் மதிப்பு இலக்கம் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். சற்றே சாய்த்துப்பார்த்தால் அந்த பச்சை நிறம் நீல நிறமாக மாறித்தெரியும். கள்ளநோட்டில் பச்சைநிறம் நீலநிறமாக தெரிய வாய்ப்பில்லை. நான்காவது...மகாத்மா காந்தி படத்திற்கு இடதுபுறம் இருக்கும் 100, 500,1000 ரூபாய் நோட்டுகளில் பாதுக்காப்பு இழை சாளரம் சாளரமாகத் தெரியும். மேலும்...வெளியே பாதி தெரிந்தும், உள்ளே பாதி பொதிந்தும் இருக்கும். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். பாரத் என்று ஹிந்தியிலும், RBI (RESERVE BANK OF INDIA-வின் சுருக்கம்!) என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி அச்சடிக்கப்படிருக்கும். 1000 ரூபாய் நோட்டில் கூடுதலாக... 1000 என்ற இலக்க எண்ணும் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். 2005 க்கு பின்பு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளில் பச்சையாக தெரியும் இழை வெவேறு கோணங்களில், பார்க்கும்போது நீல நிறமாக தெரியும். அல்ட்ரா வைலட் வெளிச்சத்தில் முன்பக்க எழுத்துக்களும் சேர்த்து மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், கள்ளநோட்டிலோ வெள்ளி நிற பெயிண்ட் ஒட்டப்பட்டிருக்கலாம். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாக தெரியாது. பாதுகாப்பு இழை போன்ற ஒன்றை ஒட்டியிருப்பார்கள். கறுப்புக்கோடு வரைந்திருப்பார்கள். 


பாதுகாப்பு இழையில் நிறம் மாறும் தன்மை இருக்காது. இதெல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் தெரியும்.  ஐந்தாவது...ஒளி ஒதுக்க முறையில் மகாத்மா காந்தியின் உருவம் சினிமா ஸ்லைடுபோல் தத்ரூபமாக தெரியும். நகல் (செராக்ஸ்) எடுக்கமுடியாத பல்திசைகோடுகளும் இருப்பதை மகாத்மாகாந்தியின் உருவத்தை வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும். காகித தயாரிப்பு நிலையிலேயே, நீர்குறியீடும் (வாட்டர்மார்க்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கள்ள நோட்டிலோ உண்மையான நோட்டை காப்பியெடுக்கும் முயற்சியில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இல்லாமல்...கார்ட்டூன் படம்போல் இருக்கலாம். வெளிச்சத்தில் பணத்தை தூக்கிப்பார்த்தால் இந்த வித்தியாசத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதையெல்லாம்...குறைந்த பணத்தை கையில் வைத்திருக்கும்போது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டுபோகும்போது வங்கிகள் அதற்கான தரமான மெஷின்களை வைத்து கள்ளநோட்டா நல்லநோட்டா என்று கண்டறிய வேண்டும். மேலும், வங்கிப் பணியாளர்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்” என்கிறார்கள் 


Thanks
http://news.muruganandam.in/2012/01/blog-post_1399.html

காய்கறி வாங்குவது ஒரு கலை - தெரியுமா உங்களுக்கு?







நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள். நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு. 

காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.

சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

வாழைக்காய் 


முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.

உருளைக்கிழங்கு 

செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.

முள்ளங்கி 

முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும். சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது. சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.

முருங்கைக்காய் 
முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்ல) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது. இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும். கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள். அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம். காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.

தக்காளி 

தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும். உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும். பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும். 

பீன்ஸ் 

பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான் நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும். நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள் புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும். இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும். இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும். 

அவரைக்காய் 

அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.

கத்தரிக்காய் 

கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும். காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது. பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும். காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.

வெண்டைக்காய் 

வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல். காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு. 

வெங்காயம் 

வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது. பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது. வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

முட்டைக்கோஸ் 

இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.

பீர்க்கங்காய் 

பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும். சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும். 

சேப்பங்கிழங்கு 

சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும். உள்ளெ வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு. ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.

புடலங்காய் 

புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய் 

பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.


எலுமிச்சம் பழம்
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம். 

கொத்துமல்லி, கருவேப்பிலை 

கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும். கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.

Thanks
http://duraidaniel.blogspot.in/2012/01/blog-post_30.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+DuraiDaniel+(Durai+Daniel)